தமிழியக்கம் - விழா நடத்துவோர்
தேர்வரும், பின் பார்ப்பனர்கள்
வரிசையுறச் செங்கைகள்
கோத்த வண்ணம்,
நீர்வருங்கால் கத்துகின்ற
நெடுந்தவளைக் கூட்டமெனக்
கூச்ச லிட்டு
நேர்வருவார் அன்னவர்கள்
நிகழ்த்துவதன் பொருளென்ன?
இனிமை உண்டா!
ஊர் வருந்தும் படி இதை ஏன்,
விழாத்தலைவர் உடன்சேர்த்தார்?
ஒழிக்க வேண்டும்!
பல்லிசைகள் நேர்முழங்கப்
பகல் போலும் விளக் கெடுப்பக்
குதிரை, யானை
நல்ல சிறப் பளித்துவர
நடுவி லொரு தேவடியாள்
ஆட, மக்கள்
எல்லாரும் கயிறிழுக்க
இயங்குமொரு தேர்மீதில்
ஆரி யத்தைச்
சொல்லிடுமோர் சொரிபிடித்த
பார்ப்பானைக் குந்தவைத்தல்
தூய்மை தானோ!
விவாக சுப முகூர்த்தமென
வெளிப் படுத்தும் மண அழைப்பில்
மேன்மை என்ன?
அவாள் இவாள் என்றுரைக்கும்
பார்ப்பனரின் அடிதொடர்தல்
மடமை யன்றோ?
உவகைபெறத் தமிழர்மணம்
உயிர்பெறுங்கால் உயிரற்ற
வடசொற் கூச்சல்
கவலையினை ஆக்காதோ!
மணவிழவு காண்பவரே
கழறு வீரே!
மானந்தான் மறைந்ததுவோ?
விழாத்தலைவீர், மணமெல்லாம்
வடசொல் லாலே
ஆனவையா சொல்லிடுவீர்!
அந்நாளில் தமிழர்மணம்
தமிழ்ச்சொல் லாலே
ஆனதென அறியீரோ?
பார்ப்பனன் போய் அடிவைத்த
வீட்டி லெல்லாம்
ஊனந்தான் அல்லாமல்
உயர்வென்ன கண்டுவிட்டார்
இந்நாள் மட்டும்?
மணமக்கள் தமைத் தமிழர்
வாழ்க என வாழ்த்து மொரு
வண் தமிழ்க்கே
இணையாகப் பார்ப்பான் சொல்
வடமொழியா, தமிழர் செவிக்
கின்பம் ஊட்டும்!
பணமிக்க தலைவர்களே,
பழியேற்க வேண்டாம் நீர்!
திருமணத்தில்
மணமக்கள், இல்லறத்தை
மாத்தமிழால் தொடங்கிடுக;
மல்கும் இன்பம்!