சரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.

வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.

கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார்-இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.

வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!

முதலாவது: அழைப்புச் சருக்கம்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(2-Nov-11, 7:07 pm)
பார்வை : 29


மேலே