தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
மஹாசக்தி
மஹாசக்தி
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.