ஒரு மாறுதலுக்காக

ஒரேமாதிரி சுற்றும் பூமி
ஒரேமாதிரி வீசும் காற்று
ஒரேமாதிரி உதிக்கும் சூரியன்
ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை

மழையும் வழக்கம்போல்
மேலிருந்து கீழாய்

தேதிபார்த்து வந்து
தேதிபார்த்துப் போகும்
வசந்தம்

ஒரேமாதிரி உணவு
ஒரேமாதிரி Àக்கம்
ஒரேமாதிரி கனவு

எப்படித்தான் நூறாண்டு
இருப்பதோ இம்மாநிலத்தே?

வாழ்முறை சற்றே
மாற்றுக மனிதரீர்

வாரத்தில் ஒர்நாள்
பகலெல்லாம் தூங்கி
இரவெல்லாம் விழிமின்

பகல்
பிறர்க்காக நீவிர்வாழ

இரவு
உமக்காக நீவிர்வாழ

வானஇலை விரித்து
நட்சத்திரம் தெளித்து
நிலாச்சோறு பரிமாறுமியற்கை

அருந்தாமல் தூங்கும்
பசியோடு மனிதகுலம்

இரவெல்லாம் விழிமின்
நட்சத்திரம் முணுமுணுக்கும்
ஓசைகள் காதுற்றால்
நல்ல செவியுமக்கு

ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு
நிலவைச் சிறையெடுமின்

கண்-காது-இருதயம்
துருப்பிடிக்குமுன் துலக்குவீர்

வானத்தின் நீளஅகலம் தெரியுமா?

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப்
பேட்டி காண்பீர்

வயதாக ஆக
வாழ்வோடு ஏன் விவாகரத்து?
நெருங்கி வாருங்கள்

குழந்தையோடு கூடி விளையாடித்
திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள்

கண்ணிரண்டும் மூடித்
தொலைபேசி சுழற்றுங்கள்

எதிர்முனையில் எவர் வரினும்
அன்றைய விருந்துக்கழையுங்கள்

வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு
நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள்

இரண்டு புரியும் உமக்கு

ஒன்று : உங்கள் அறியாமை
இரண்டு : பிள்ளையர் பெருமை

உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால்
ஓடுங்கள் ஓடுங்கள்

எங்கே மழையின் கடைசித்துளியோ
அங்கே நில்லுங்கள்

மழைக்கு வெளியே நின்று
மழையை ரசியுங்கள்

மழைபெய்த களிமண் நிலமாய்
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்

பணம் கிடந்தால் மட்டுமல்ல-
ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின்
கூந்தல் பூஉதிர்ந்தாலும்
காவல்நிலையம் ஒப்படையுங்கள்

மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும்

அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்
ஆளுக்கொரு கோப்பைத் தேநீர்.


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:15 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே