தமிழியக்கம் - வாணிகர்
வாணிகர், தம் முகவரியை
வரைகின்ற பலகையில், ஆங்
கிலமா வேண்டும்?
"மாணுயர்ந்த செந்தமிழால்
வரைக" என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழன் நலங்காக்கும்
செய்கை யாமோ?
உணவுதரு விடுதிதனைக்
"கிளப்" பெனவேண் டும்போலும்!
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு "சில்குஷாப்"
எனும்பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்!
மணக்கவரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தா னில்லை!
"பவன்" "மண்டல்" முதலியன
இனியேனும் தமிழகத்தில்
பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்!
ஆங்கலச்சொல் இந்தி மொழி
வடசொல் யாவும்
இவண் தமிழிற் கலப்பதுண்டோ
"பிராம்மணர் கள்உண்ணும்
இடம்" இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம்
ஒழிந்திடுதே ஐயகோ
உணர்வீர் நன்றே.
அறிவிப்புப் பலகையெல்லாம்
அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே
அன்றி, அச்சொல்
மறுவற்றுத் திகழாளோ
செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள்
மகிழ்ந்தி டாரோ?
குறியுற்ற மறவர்களே!
இப்பணியை முடிப்பதற்கோர்
கூட்டம் வேண்டும்.
பேச்சாலும் எழுத்தாலும்
பாட்டாலும் கூத்தாலும்
பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு!
வீதியெலாம் வரிசையுற
உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும்
வருகின்ற இன்னலுக்குள்
இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டு?
பைந்தமிழ்க்குச் செயும் தொண்டு
பருக வாரீர்.