தமிழியக்கம் - அரசியல்சீர் வாய்ந்தார் (3)

தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்.

நமை வளர்ப்பான் நந்தமிழை
வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால்
நம்முன் னேற்றம்

அமையாது. சிறிதும் இதில்
ஐயமில்லை, ஐயமில்லை
அறிந்து கொண்டோம்.

தமிழ் எங்கே! தமிழன் நிலை
என்ன எனத் தாமறியாத்
தமிழர் என்பார்

தமிழர் நலம் காப்பவராய்
அரசியலின் சார்பாக
வர முயன்றால்

இமைப்போதும் தாழ்க்காமல்
எவ்வகையும் கிளர்ந்தெழுதல்
வேண்டும்! நம்மில்

அமைவாக ஆயிரம்பேர்
அறிஞர் உள்ளார் எனமுரசம்
ஆர்த்துச் சொல்வோம்.

நகராட்சி சிற்றூரின்
நல்லாட்சி மாவட்ட
ஆட்சி என்று

புகல்கின்ற பல ஆட்சிக்
கழகங்கள் எவற்றினுமே
புகநி னைப்பார்

தகுபுலமை குறிக்கின்ற
சான்றுதர வேண்டுமெனச்
சட்டம் செய்தால்

அகலுமன்றோ தமிழ்நாட்டின்
அல்லலெலாம்? அல்லாக்கால்
அமைதி யுண்டோ?

தமிழறியான் தமிழர் நிலை
தமிழர்நெறி தமிழர்களின்
தேவை, வாழ்வு

தமையறிதல் உண்டோ எந்
நாளுமில்லை! தமிழறியான்
சுவையே காணான்!

சுமைசுமையாய் அரசியல்சிர்
சுமந்தவர்கள் இதுவரைக்கும்
சொன்ன துண்டோ

தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில்
கட்டாயம் என்பதொரு
சட்டம் செய்ய!

ஆங்கில நூல் அறிவுக்குச்
சான்றிருந்தால் அதுபோதும்
அலுவல் பார்க்க!

ஈங்குள்ள தமிழர் நெறி
அவர்க்கென்ன தெரிந்திருக்கும்?
இதுவு மன்றி.

மாங்காட்டுச் செவிடனெதிர்
வடிகட்டி ஊமையரை
வைத்ததைப் போல்

தீங்கற்ற தமிழறியான்
செந்தமிழ் நாட்டலுவலின் மேற்
செல்ல லாமோ.


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 7:05 pm)
பார்வை : 40


மேலே