தமிழியக்கம் - அரசியல்சீர் வாய்ந்தார் (2)

தெலுங்குதமிழ் நாட்டினிலேன்?
செத்தவட மொழிக்கிங்கே
என்ன ஆக்கம்?

இலங்கும் இசைப் பாட்டுக்கள்
பிறமொழியில் ஏற்படுத்த
இசைய லாமோ?

நலங்கண்டீர் தமிழ்மொழியால்
நற்றமிழை ஈடழித்தல்
நன்றோ? சின்ன

விலங்கதுதான் சோறிட்டான்
மேற்காட்டும் நன்றியைநீர்
மேற்கொள் ளீரோ.

பொதுமையிலே கிடைத்திட்ட
செல்வாக்கை இனநலத்துக்
காக்குவோரை

இதுவரைக்கும் மன்னித்த
எழில்தமிழர் இனிப்பொறுப்பார்
என்பதில்லை!

குதிகாலும் மேற்செல்லும்
அடுத்தபடி கீழேதான்
வந்து சேரும்

அதுவியற்கை! மலைக்காதீர்!
அறிவுநாள் இது! கொடுமை
அழிந்தே தீரும்.

அரசியலார் அறிக்கையிலும்
சுவடியிலும் தமிழ்ப் பெருமை
அழித்தி டக்கை

வரிசையெல்லாம் காட்டுவதோ?
வடமொழியும் பிழைத்தமிழும்
பெருகி விட்டால்

வருநாளில் தமிழழியும்
வடமொழிமே லோங்குமெனும்
கருத்தோ? நாட்டில்

திருடர்களை வளரவிடும்
ஏற்பாடோ? செல்லுபடி
ஆகா திங்கே.

திருடர்கள் ஜாக் கிரதை இதைத்
திருடருண்டு விழிப் போடி
ருங்கள் என்றால்,

வருந்தீமை என்ன? நியா
யஸ்தலத்தை அறமன்றம்
எனில்வாய்க் காதோ?

அருவருக்கும் நெஞ்சுடையார்
அருவருக்கும் செயலுடையார்
அன்றோ இந்தக்

கருவறுக்கும் வினை செய்வார்
கலப்பாலில் துளி நஞ்சும்
கலத்தல் வேண்டாம்.

அரசியலார் அலுவலகம்
அறமன்றம் இங்கெல்லாம்
அலுவல் பெற்றீர்

உரையனைத்தும் ஆங்கிலமோ?
உணர்விலையோ? ஒழுக்கந்தான்
இதுவென் பீரோ.

வரும்நாட்டுப் புறத்தவரின்
தமிழ்ப் பேச்சும் பிடிப்ப தில்லை
வண்ட மிழ்சேர்

திருநாட்டிற் பிறந்தோமென்
றெண்ணுவதும் இல்லை இனித்
திருந்து வீரே.


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 7:04 pm)
பார்வை : 48


பிரபல கவிஞர்கள்

மேலே