தொழிலாளர் விண்ணப்பம்
காடு களைந்தோம் - நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென்றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல்மீதில் - பல்
லாயிரங்கப்பல்கள் போய்வரச்செய்தோம்
பல தொல்லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந்தந்தோம்.
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றைவளைத்து நெல்நாற்றுகள் நட்டோம்;
கூடைகலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக்கொவ்வாத - இந்த
வையத்தை இந்நிலை எய்தப்புரிந்தோம்,
ஆழ்கடல், காடு, - மலை
அத்தனையிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை, அசுத்தம் - குப்பை
இலை என்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக்கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்!
கந்தையணிந்தோம்! - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெலாம்இது செய் நன்றிதானோ?
மதத்தின் தலைவர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளையடித்திட்ட கோடீசுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம் பண்ணி விட்டீர்.
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழிலாளர்கள் மிகப் பலர் ஆதலின்.
கப்பல்களாக - இனித்
தொழும்பர்களாக மதித்திடவேண்டாம்!
இப்பொழுதே நீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!