கூடித் தொழில் செய்க
கூடித் தொழில் செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்
வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!
நாடிய ஓர் தொழில் நாட்டார் பலர் சேர்ந்தால்
கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!
சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!
அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்
பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!
பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்
முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!
ஒற்றைக் கைதட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!
ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப்
பெரும்பே றடைவதுதான் வெற்றி என்க தோழர்களே!
இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த
சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!
நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும்
பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!
பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம்
கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!
ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல்
சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!
சந்தைக் கடையோ நம் தாய்நாடு? லக்ஷம்பேர்
சிந்தைவைத்தால் நம் தொழிலும் சிறப்படையும் தோழர்களே!
வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
மூடிய தொழிற்சாலை முக்கோடி! தோழர்களே!
கூடைமுறம் கட்டுநரும் கூடித்தொழில்செய்யின்
தேடிவரும் லாபம் சிறப்புவரும் தோழர்களே!