தளை அறு
கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
'கடையர்' 'செல்வர்' என்ற தொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!
உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்
கடவுளாணையாயின் அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?
ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர் உழைப்ப வர்தொகை!
நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை;
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?
தொழிலறிந்த ஏழை மக்கள்
தொழில் புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள் தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழை மக்கள்
சோற்றிலே மண் போடுவார்!
நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே
கடவுள்என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.