பேரிகை

துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக் கெனும்
நுட்ட மனோபாவம்,
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக்கும்; புவி
ஆக்கந் தனைக் கெடுக்கும்!
வன்புக் கெலாம் அதுவே துணை யாய்விடும்
வறுமை யெலாம் சேர்க்கும்!
'இன்பம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
எங்கும் முழக்கிடுவாய்!

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
தாரணி என்ற வண்ணம்,
தீமைக் கெல்லாம் துணையாகும்; இயற்கையின்
செல்வத்தையும் ஒழிக்கும்!
தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
சித்தத்திலே சேர்ப்போம்!
'க்ஷேமம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
செகம் முழக்கிடுவாய்!

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப் பான்மை
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்!
சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
சூழத் தகாது கண்டாய்!
'செல்வங்கள் யார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழக்கிடுவாய்!


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:27 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே