பாரத தேவியின் அடிமை

அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே.

சரணங்கள்

மன்னிய புகழ் பாரத தேவி
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன்.

இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக் கொத்த அடிமைக்காரன்.

வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன்.

காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன்.

காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(2-Nov-11, 6:48 pm)
பார்வை : 57


மேலே