காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீ உறிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற்றேயோ!

விழியோக வையமெல்லாம் தேடி. மிகுக்க
மொழிநோகக் கூவி, நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல் மொழிபழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல் வந்துகிள்ளை தனைத்தட்டிப் போயிற்றோ!
அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும்
வாழத் தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை

நோக்கிப் பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தைச்
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

தூயோனே மீனாட்சி சுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவவிட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டால்
அந்தோ உனக்கார் ஓர் ஆறுதலைச் செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்?

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்றுகேள்:
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்.
தேடுகின்றாள் உன்னை! நீ தேடந்தப் பொன்னை, ஏன்
வாடுகின்றாய்? ஏன் உன் மலர்விழியை வாட்டுகின்றாய்.

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்.
அன்னவளைக்கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முனனேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டு நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே! அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்துகின்றேன் நான்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 5:16 pm)
பார்வை : 25


மேலே