ஒரு கவிஞன்

உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்

கண்ணில் மழைகட்டும் போதெல்லாம்
பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான்
ஆயினும் - பரிகாசமே பரிசாய்ப் பெறுவான்.

காலக்கண்ணாடி என்பான் தன்னை
ஒருபயலும் அதில் முகம்பார்த்ததில்லை

கடல்கடக்கும் பறவைகாள்!
சிறகுவலித்தால் எங்கே
சிரமபரிகாரம் என்பான்

சுற்றும் பூமி நின்றுவிடில்
சூழ்காற்று எங்குறையும் எனவியப்பான்

சமூகம் அவனைவிட்டுப்
பத்தடி தள்ளியே பயணித்தது

உறைந்துகிடக்கும் நிலாவெளிச்சமென்று
பனித்துளிகள் பார்த்து இமைதொலைப்பான்

அவனுக்கு
நாட்டுவைத்தியமே
நல்லதென்றாள் பாட்டி

கோடுகளற்ற நாடுகள்
வேலிகளற்ற வீடுகள்

வறுமைகளைந்த வாழ்வு
கண்ணீர் கழிந்த சமூகம்

ஊர்மேடையேறி உரக்கப்படுவான்
குல்லாய் தொலைத்த கோமாளியென்றது கூட்டம்

பெயர்கள் கூட
ஜாதிமத அடையாளம் காட்டுமாதலால்

எல்லார்க்கும் பெயர்களைந்து
எண்களிடச் சொல்வான்

அவனை மனிதப்பிரஷ்டம் செய்யச் சொன்னது மதம்

சில்லறைகள் ஓசையிடும்
சமூகச் சந்தையில்

அடங்கிபோனது அனாதைப்புல்லாங்குழல்

பொறுத்தகவி ஒருநாள்
பொறுமை துறந்தான்

தன் கவிதைகளை
நெற்றியில் எழுதி

ஒட்டிக்கொண்டான்

கூட்டத்தை ஊடறுத்துக்
கவிபாடிக் கலைத்தான்
ஊசியின் காதோடும்

ஒப்பித்தான் கவிதைகளை
தெருக்கள் வெறிச்சோடின

ஒரு கையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் கவிதையேந்தி
நிர்வாணமாக ஊர்வலம் போனான்
கண்கள் - கதவுகள் அடைத்துக்கொண்டன

தாஜ்மகால் சுவரில்
தார் எழுதினான்
காலையில் கைதாகி
மாலையில் விடுதலையானான்

ஒருநாள்...
பறவைகள் எச்சமிடும்
கோயில் கோபுரமேறி...
கலசம் உருகக் கவிதை கூவினான்

நிர்வாகம் அவனை
இறங்கும்வரை கெஞ்சியது
இறங்கியதும் கிழித்தது

நேற்று...
தன் முதற்கவிதை வெளிவந்த பத்திரிகையின்
முதற்பிரதி கொள்ள
உயிர்பிதுங்கும் பரபரப்பில்
ஓடிக் கடந்ததில் -
சாலை விபத்தில் செத்துப்போனான்

மொத்த ஊரும் திரும்பிப் பார்த்து
மரித்துப் போயினன்
'மகாகவி'யென்றது


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:14 pm)
பார்வை : 0


மேலே