குளிர் கால உணவு முறைகள் மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு...
குளிர் கால உணவு முறைகள்
மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். மேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.குளிர்காலங்களில் சூடான உணவு களை சாப்பிடுவதும் வெயில் காலங்களில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும் பொதுவான ஒன்றாகும்.
உடலை சூடாக வைக்கும் உணவுகள்: காய்கறிகள்: டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.
மீன் : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
தானியங்கள்: சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது.
வேர்க்கடலை: குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேன்: குளிர் காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.
பாதாம்: பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்
காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
இஞ்சி: மருத்துவப்பலன்களை பெற்ற இஞ்சி, குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது.
இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப்
இஞ்சி டீ அருந்தினால், அது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.
காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர் சாப்பிடலாம்.இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஜலதோஷம் தொடர்பான பிரச்னைகள் வராது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம். மழைக்காலங்களில், அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம்.குளிர்காலத்தில் உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு உதவுவது ஆரஞ்சு பழமும், தேனும்தான்.வைட்டமின் ‘ஏ' மற்றும் ‘சி' சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். அதிகளவில் தண்ணீர் குடித்து வருவதும் நல்லது.
சாப்பிடக்கூடாதவைஉணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம். சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. அவர்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.
சரும பராமரிப்பு: ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பவுடராக்கி தண்ணீருடன் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும்.அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை கலந்து, சிறிது தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருதல் நல்லது. இதனால் மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்பு, கீறல் வடுக்கள் உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது நிச்சயம். தோல் பாதிப்புதோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் உடலை கழுவக்கூடாது. அப்படி கழுவும்போது ஏற்கனவே குறைந்துள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். மேலும் சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாகவே வறட்சியாகிவிடும். அதனால் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம்.
மிதமான வெந்நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள் மற்றும் குளிர்காலத்தில் வறட்சி, ஏற்பட்டவர்கள் குளிர் கிரீம்களை (Cold Creams ) உபயோகிக்கலாம். பாரபின் எண்ணெய், வாஸ்சலின் போன்ற தைலங்களும் பயனளிக்கும்.கால்களில் உள்ள வெடிப்புகளுக்கு யூரியா மற்றும் ஆண்டிபயாடிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். மாலையில் குறிப்பாக குளிர்காலத்தில் காலுறைகளை இரவு முழுவதும் அணிந்தால் கால் வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.