செய்தியே, உனக்கு ஒரு செய்தி

'கடந்த இருபத்து நான்கு
மணி நேரம்..'
முடிவதற்குள்
வாக்கியத்து முற்றத்திற்குள்
நெடுமூச்சை, கண்ணீரை
நிரப்பும் செய்தியே!

கொலைகளிலும்
கொள்ளைகளிலும்
முகம் கறுத்து வருகிற நீ,
புன்னகை நதிகளில்
நீராடி ஒரு நாள்
புறப்பட்டு வாராயோ?

போராட்டம்,
ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி என்று
காயம் பட்டுக் கதறியபடி முள்காட்டில்
ஓடி வருகிற
உனக்குப்
பூங்காக்களின் முகவரிகள்
தெரியாதா?

கற்பழிப்பில்
கள்ளக் காதலில்
சங்கிலிப் பறிப்பில்
மானம் இழந்து
வருகிற நீ,
ஒழுக்கச் சாளரத்தின் ஓரம்
ஒரு நாளேனும் ஒதுங்கி
நிற்கக் கூடாதா?

உன் மார்பில்
பால் அருந்தும் வார்த்தைகள்
உதடு திறக்கும் முன்
உண்மைகளின்
சுவாசப் பைகளைக்
கடித்துக் குதறுவது ஏன்?

கட்சித் தாவல்களால் ஆட்சிக்
கவிழ்ப்புகளால்
கருக்குலைந்து உருக்குலைந்து
ஓடி வரும் நீ...
போலி ஜன நாயகத்தைப்
புதைத்துவிட்டதாய் என்று
எப்போது வந்து
எம்மிடம் சொல்வாய்?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:28 pm)
பார்வை : 16


மேலே