எது தேசபக்தி?

பூமி மங்கையின்
பூங்கன்னத்தில் முத்தம் போடும்
புலவன் நான்...
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
சொந்தக்காரன்...
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம் இந்த
வெளிச்சத்தின் புதல்வனை
விமர்சிக்கிறது.
என் தமிழ்மேல்
தமிழ் நாட்டின் மேல்
அன்பு வைப்பது என் பிறப்புரிமை.
இந்தியத் திருநாட்டின்மேல்
இதயத்தில் போடும்
பாசப் பதியம் என் சிறப்புரிமை.
புத்தரும் பெரியாரும்
என்
அறிவு நரம்புகளில்!
மகாவீரரும் இராமானுசரும்
என்
இரத்த அணுக்களில்!
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பே.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும் அவன் என்
தோழன்!
அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த்தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
கொடியை உயர்த்திவிட்டுப்
பாரத தேவியின் பாதச் சிலம்பைத்
திருடுவதுதான் தேச பக்தியா?
அவளை
அடகு வைத்துத்
தங்கள் வீட்டுக்குத்
தங்கச் சாளரம் போடுவதுதான்
தேச பக்தி என்றால் - அந்தத்
தேச பக்தி,
எனக்குத் தேவையில்லை!
கள்ள வாக்குகளால்
ஜனநாயகத்தைக் கற்பழிக்கும்
பதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்
ஒப்புக் கொள்கிறேன்.. அந்தத்
தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்!
தேச பக்தியின் முன்னோடிகள்
நரிகளின் மூதாதையர் ஆனது
எப்போது?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:43 pm)
பார்வை : 32


மேலே