ஒரு திருமண வரவேற்பில்..

மின்சாரம்
மரம் செடி கொடிகளில்
வண்ண வண்ணமாய்ப்
பூத்துக் குலுங்க - அந்த

விந்தைத்
தோரணம் தொட்ட காற்றின் கைகள்
வெடுக்கென்று விலகின.

நட்சத்திரங்கள் தமது
கனவுகளை, பூமியில்
நழுவவிட்டனவோ என்று
தவித்தது வானம்.

விலை அதிகம் கொடுத்தாலும்
இந்த
விழாக்காட்சி கிடைக்காது
கற்பனைக்கு.

திருமண
வரவேற்பு அந்தத்
தெருவின்
மார்புத் துடிப்பையே
தீவிரப்படுத்திவிட்டது.

வாகன அலைகள் மக்களை
ஒதுக்கிச் சென்றன
வசீகர வாசலில்
பிரபலங்களை வரவேற்கப்
புன்முறுவல் உதடுகளில்
மின்னி மின்னி மறைய
ஒளிப்பதிவுக்குள், தொடர்ந்து
வந்து விழுந்தன
மகிழ்ச்சிகள், கைகுலுக்கல்கள்.

பளிச்சிட்ட ஆபரணங்கள்
ஒளிச் சிதறல்களில்
தலை நிமிர்ந்த கர்வங்கள்...
தலை கவிழ்ந்த தவிப்புகள்...

தங்கத் தகடுகளான
பட்டுப் புடைவைகள் மேல்
முட்டி மோதிய மூச்சுகளில்
மூவாயிரம் அர்த்தங்கள்.

கோலிக் குண்டுகள்
போல நெரிசலில்
உருண்டோடும் கண்கள்!
இதோ!
ஆளுநர், தொழில் அதிபர்கள்,
அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நடிக நடிகையர்,
காவல், நீதித்துறையினர்...
பார்வைகளைத்
திருப்பும் பரபரப்புகள்!

'முக்கியங்கள்'
தராசுகளில் நிறுத்தப்பட்டு
இட ஒதுக்கீடுகள்

அரங்கிற்குள் வந்துவிட்ட
திசைகளின்
அங்கமெல்லாம் வாசனைத்
திரவியங்கள்.
அலைஅலையாய்ப்
பிரமுகர்கள்
எழுவதும் அமர்வதுமாய்...

குரலா? அது
குயில் தோப்பா?
வீணையா? இல்லை, ஒரு
வீணையே
கர்ப்பம் தரித்து இந்த
வித்தகியைப் பெற்றெடுத்ததா?

கீத அலையெழுப்பும்
நாத நதியொன்று
நகர்கிறது நயமாய், நளினமாய்...
பாடல்களின்
கன்னங்களில் முத்தங்கள்
பதிவாகின்றன
ஆனால்...

சடங்கு விசாரிப்புகள் அந்தச்
சங்கீதத்தின்மேல் தெறித்து
விழுகின்றன.
ஏழிசையின் எலும்பு நொறுங்க
இரைச்சல்.

விருந்து தின்று வீடு
திரும்பத் துடிக்கும்
அவசரங்களைக் கண்ட
இசைத்தேவதை உதட்டில்
இள நகையோடு தவழ்கின்றன
இராகங்கள்.

சித்தரித்து
அவர் படைக்கும்
தேனமுதப் பாடல்களை
மண்டப விதானத்துச்
சித்திரங்கள் உண்டு மகிழ்ந்தன....

மண்டபத்துள் வந்து நின்ற
மாலைப் பொழுது
பருகியது அடுத்த
நாளையின்
காதுகளுக்கென்றும்
அள்ளிக் கொண்டது கை நிறைய.

தன்னில் இருந்து
இன்னமுது எடுத்துத் தன்னில்வைத்துத்
தன்னோடு படைக்கும்
அந்த
இசை வேள்வி தொடரும் வரை
அங்கு
முகாமிட்டிருந்தது சுவர்க்கம்!

புறப்பட்டுப் போகும்போது
அது
அரங்கில் அள்ளீய
இசைமலர்கள் சிலவற்றைத்
தூவி
வாழ்த்தியது மணமக்களை.


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:37 pm)
பார்வை : 27


பிரபல கவிஞர்கள்

மேலே