தவம் செய்யும் நெஞ்சோடு.. தை முதல் நாள்..
கலப்பை
ஒரு கருப்பை ஆகி
நலன்களை ஈன்றெடுக்குமா
உழவனுக்கு?
பசைத் தொட்டில்களில்
புது
இன்பங்கள்
கண் மலருமா?
சிதைந்த
புன்னகைகள்,
வாழ்க்கையின் உதடுகளில்
சீர்திருத்தப்படுமா?
திசைமாறிப் போன
இசைகள் இனி,
புல்லாங் குழலுக்குள்
திரும்பி வருமா?
மழை மேக வில்கள்,
உலர்ந்த
உள்ளங்களில்
வண்ணங்கள் எழுத
வருமா?
வேர்வைகளுக்கு,
நாடு
ஆரத்தி எடுக்குமா?
உழைக்கும்
தோள்களை முத்தமிட்டு
உலகம் சுழலுமா?
பூபாளக் குயில்கள்
கூடுகட்டும் திசைகள்
பூப்பூவாய்
மலர்ந்திடுமா?
என்று
தை முதல் நாள்
தவஞ்செய்யும் நெஞ்சோடு
கிழக்கைத்
திறக்கிறது.
மார்கழிப் பனிமேல்
பாதம்
பதித்து வரும்
தையின் ஆன்மாவில்
வெப்ப யாகம்
வினாக்கள் செய்கின்றன.
சிற்றூரின்
வயற் பரப்பில் சின்னக் கங்கொன்று
மூச்சுயிர்த்தால்,
உறங்கும் கோடி கங்குகளில்
ஆவேசம்
விழி திறந்தால் ஒரு
புதுமைச் சமுதாயம்
உதயமாகாதா என்று
இதயம் தவித்தபடி வருகிறது தை!
பாட்டாளிகள்
வீட்டுப் பானைகளில்
பால் பொங்கலாய்,
அரசியல் சாசனம்
அர்த்தப்படும் நாளை
அவசரப்படுத்தும் தை முகம்
சிவந்து தெரிகிறது!