குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:09 pm)
பார்வை : 88


மேலே