அர்த்தங்களாய் இருக்க ஆயத்தமாவோம்

நரைபடிந்த
கிழட்டுச் சொற்களின்
அனுபவங்களைக் கேட்க
நேரம் இல்லை இப்போது!

அவற்றின்
முகச் சுருக்கங்களில்
காலம்
இடறிவிழுந்து கிடக்கிறது.

மவுனத்தைக்
காயப்படுத்தும்
வார்த்தைகள்
களங்கப்பட்ட ஓசையின்
கர்ப்பத்தில் பிறந்தவை.

சரியான
சொல் ஒன்று உச்சரிக்கப்பட்டால்
காற்று,
கையில் பூச்செண்டோடு
ஓடிவந்து
கட்டியணைத்துக் கொள்ளும்.

ஒளி,
விளக்குகளில் வாழ்வது,
வாழ
வார்த்தைகளில்
இடம் இல்லாதபோதுதான்.

புதிய சொல்லை
எங்கேபோய் நான் தேட?
வார்த்தைகள்
சுதந்திரமாய்
வாழும் இடம் தெரிந்தால்
சொல்லுங்கள்,
முயன்று பார்க்கிறேன்.

எந்தப் பொய்கையில்
சொற்கள்
தண்ணீரின் அர்த்தத்தில்
தம்மை
நனைத்துக் கொண்டிருக்கின்றன?
சொல்லுங்கள்,
போய்க் கரையில் காத்திருக்கிறேன்!

எந்த
நெருப்பில்
சொற்கள், வெப்பத்தைச்
சுவாசிக்கின்றன?
அந்த நெருப்பு
நீடித்து எரிய என்
அங்கங்களை விறகாய்
அரிந்து தருகிறேன்!

சொல்
புதிதாய் வேண்டும்,
கவிதை கட்டுவதற்கு அல்ல...
மனித
ஆன்மாவுக்குள் - ஒரு
ஜீவனுள்ள
அக்கினிக் கங்கைச்
செருகி வைக்க!

சொல்
புதிதாய் வேண்டும்,
ஒரு சந்தம் எழுப்ப அல்ல.

மானுடத்தைப்
புதிய
வேதங்கள் துதிக்க!

ஒரு
வினைச் சொல்
தயாரிப்போம்.

வினையைச் செய்து முடித்துவிட்டுத்
தான் -
'சொல்லவில்லை' என்பதை
உலகுக்கு அது சொல்லட்டும்!

எதற்கும்
சூட்டப் படாத பெயர்ச் சொல்
ஒன்று
உற்பத்தி செய்து வைப்போம்!

அதைச்
சூட்டுவதற்கு
ஒன்றைப் படைத்துக் கொள்ளட்டும்
எதிர்காலம்!

ஆனால்
அதன் அர்த்தங்களாய்
நாம் இருக்க
ஆயத்தமாவோம்!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:33 pm)
பார்வை : 17


மேலே