இலை

இன்றோ... நாளையோ...
இப்போதோ... பிறகோ...
விழுந்து விடுவேன்

உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி நிற்கிறேன்

உரசும் காற்று
உணர்ச்சிவசப்பட்டாலோ

முத்துமழைத் துளியொன்று
மூக்கில் விழுந்தாலோ

என் கிளையில் ஒரு பறவை
சிவ்வென்றமர்ந்து சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ

நான் விழுந்துவிடுவேன்

விடை கொடு கிளையே
விடை கொடு

இருந்தவரை என்மீது
எத்தனை குற்றச்சாட்டு

காற்றின்
தப்புத் தப்பான பாடலுக்கும்
தலையாட்டுவேனாம்

எச்சமிடவரும் பட்சிகளுக்கும்
பச்சைக்கொடி காட்டுவேனாம்

பக்கத்து இலைகளோடு
ஒவ்வொரு பொழுதும் உரசல்தானாம்

இதோ
சாவை முன்னிட்டு என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்

அப்படியாயின்
வாழ்வு குறைகுடமா?
மரணமே பூரணமா?


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:56 pm)
பார்வை : 53


பிரபல கவிஞர்கள்

மேலே