நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.

நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
மதி எங்கே அலையும், ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும், அது யாருக்குத் தெரியும் ?

அதை அறிந்து சொல்லவும் மதியில்லை
மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை..

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை..
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை…

எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை.
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடமும் வாழவும் இல்லை…

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….
புன்னகை அணிந்து போரை நடத்து….

கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு களைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை.

ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை.
நிறைந்த வாழ்வு நேராதிருந்தால்
வந்ததில் நிறைவது வாழ்வின் கடமை..

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:51 pm)
பார்வை : 73


பிரபல கவிஞர்கள்

மேலே