மொழியும் சைகையும்

உள்ளும் புறமும் கரிய வராக நிறம்
அதிகாரம் பணம் பதவி கண்ட
வாலின் சுழி இனக்குணம்
வறண்ட மலம் Staple Fiber Food

குறிஞ்சி கருங்குவளை நீலம்
சங்குபுட்பம் நீலாம்பல் கருநொச்சி
கருந்துளசி நீலஊமத்தை எனக்
கபிலன் குறித்த , குறிக்க மறந்துபோன
யாவும் சட்டியில் வளரும் குரோட்டன்

அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு
இனப்பெயர் வரையப்படும்
சங்கம் காப்பியங்கள் முப்பால் கம்பன்
யாவும் சொத்தாக இருந்து அழிந்தவை
எனவும் குறிக்கப் பெறலாம்.

மறம் அறம் காதல் கொடை விருந்து
அன்பென யாவும் பூர்வ குணங்கள்
எனவாகும்

வாழத் தகுதியற்ற இனம் போலும்
அழிந்து போயிற்று
எனப் பார்வையாளர் இரக்கம்
உகுத்து நகர்வர்
எவனோ எங்கோ என்றோ பாடி வைத்தான்
தனெக்கென நாடு , கொடி , கீதம் இல்லா
மொழி அழியும் என

இன்று நாளையைக் குறிப்புணர்த்துவது
பல்லிளித்தல் கையேந்துதல்
கூனிக் குறுகி நிற்றல்
இரத்தல் தெண்டனிடுதல் செய்வாருக்கு
மொழி எதற்கு?

சைகையே வெள்ளம் அல்லவா!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:34 pm)
பார்வை : 0


மேலே