கற்பனை யூர்

கற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்
கந்தர் வர்விளை யாடுவராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை.

திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல் - இது
ஸ்பானியக் கடலில் யாத்திரைபோம்.
வெருவுற மாய்வார் பலர்கடலில் - நாம்
மீளவு நம்மூர் திரும்புமுன்னே.

அந்நகர் தனிலோ ரிளவரசன் - நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்
மனைவியு மெழுந்தங்கு வந்திடுவாள்.

எக்கால மும்பெரு மகிழ்ச்சியங்கே
எவ்வகைக் கவலையும் போருமில்லை;
பக்குவத் தேயிலை நீர்குடிப்போம் - அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தி லளித்திடவே.

இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம் - நம்மை
நலித்திடும் பேயங்கு வாராதே.

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்,

செந்தோ லசுரனைக் கொன்றிடவே - அங்குச்
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்
ஸந்தோ ஷத்துடன் செங்கலையும் - அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம்.

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே - வழி
காண்பதி லாவகை செய்திடுவோம் - ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! - நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ?

குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம் - அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் - நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Mar-11, 7:07 pm)
பார்வை : 611


மேலே