சொல்

தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவலறிந்து வருவீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலு மில்லையே

"ஓம்" என்றுரைத்து விடிற்போதுமோ? - அதில்
உண்மைப் பொரு ளறிய லாகுமோ?
தீமையனைத்து மிறந்தேகுமோ? - என்றன்
சித்தந் தெளிவு நிலை கூடுமோ?

"உண்மை யொளிர்க" வென்று பாடவோ? - அதில்
உங்களருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்.

"தீயை யகத்தினிடை மூட்டுவோம்" - என்று
செப்பு மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை
என்றுந் துயர மின்றி வாழ்த்துவீர்.

வான மழை பொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியு மின்பங் கூட்டுவீர்
கானை யழித்து மனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.

விரியு மறிவு நிலை காட்டுவீர் - அங்கு
வீழுஞ் சிறுமைகளை யோட்டுவீர்
தெரியு மொளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந் தொழிலிற் பூட்டுவீர்.

மின்ன லனைய திற லோங்குமே - உயிர்
வெள்ளங் கரையடங்கிப் பாயுமே
தின்னும் பொரு ளமுத மாகுமே - இங்கு
செய்கை யதனில் வெற்றி யேறுமே.

தெய்வக் கனல் விளைத்து காக்குமே - நம்மைச்
சேரு மிரு ளழியத் தாக்குமே.
கை வைத்தது பசும்பொன் னாகுமே - பின்பு
காலன் பய மொழிந்து போகுமே.

"வலிமை, வலிமை" யென்று பாடுவோம் - என்றும்
வாழுஞ் சுடர்க் குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம் - நெஞ்சிற்
கவலை யிருள னைத்து நீங்கினோம்.

"அமிழ்தம் அமிழ்தம்" என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழிற் பழமறையைப் பாடுவோம் - என்றுந்
தலைமை பெருமைபுகழ் கூடுவோம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Mar-11, 7:04 pm)
பார்வை : 836


பிரபல கவிஞர்கள்

மேலே