இரங்கல் கவிதை...

என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!

இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!

என் நண்பா!

இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!


கவிஞர் : கருணாநிதி(6-Dec-12, 11:48 am)
பார்வை : 0


மேலே