சிலந்தி

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தெளர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி
‘தெளர்’ குகையே !
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்
‘தெளர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ
சிலந்தியே !
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்
உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலைதான்
மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஓரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்காகல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்கு வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்
அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்ட
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ ஊலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முகத்திரை போட்டாயோ
நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு*
கபன்* நெய்யத் தொடங்கினாய்
இறைவன் தந்த நூல் மறை-நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது
என் இதயமும் ஒரு தெளர் குகைதான்
எங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா !
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா ?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
இன் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா?
புனிதமான சிலந்தியே !
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:39 pm)
பார்வை : 133


பிரபல கவிஞர்கள்

மேலே