தவிப்பதற்கோ பிள்ளை

விளக்கு வைத்த நேரத்தில் என் வேலைக்காரி
வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
களிப்புடனே 'பிரசவந்தான் ஆய்விட்ட' தென்றாள்!
காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத்தாலே
உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன் நன்றாய்
வளர்த்துவரக் குழந்தைக்கு வயது மூன்றின்பின்
மனைவிதான் மற்றுமொரு கருப்பமுறலானாள்.

பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்!
கண்ணழகும் முக அழகும் கண்டு நாட்கள்
கழிக்கையிலே மற்றொன்றும் பின் ஒன்றும் பெற்றாள்!
எண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்
எழில் மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
உண்ணுவதை நானுண்ண மனம் வருவதில்லை;
உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
வாராத நினைவெல்லாம்வந்து வந்து தோன்றும்!
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை!
அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேபமில்லை;
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி?
இரும்பா நான்? செத்துவிட்டால் என் பிள்ளைகட்கே
என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கும் நாளில்,

ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி
தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
'அயர்ந்தீரோ' என்றுரைத்தாள்! மலர்க்கரத்தால் தொட்டாள்!
'தெருவினிலேபனி' என்றாள், ஆமென்று சொன்னேன்;
தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம். வார்த்தையென்ன
தேவை;

மனைவியாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம் வாய்த்ததொரு கனவு;
'கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
கதியற்ற குழந்தைகளோர் கோடானு கோடி
மனம் பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
இனத்தவரின் குழந்தைகளோ. ஏ! என்று கொஞ்ச,
ஏறிவந்த சீ மான்கள் சீ! என்று போனார்.'

கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
காதல்எனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த்
தினம் நாங்கள் படும்பாட்டை யாரறியக்கூடும்?
சீ! சீ!! சீ!!! இங்கினியும் காதல் ஒரு கேடா?
எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ!
தனியறையில் கண்ணொடுகண் சந்திக்க ஆங்கே
தடுக்கி விழுந்தோம் காதல் வெள்ளத்தின் உள்ளே!

பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஒர்நாள்,
பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்!
தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கே பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தான முறை நன்று; தவிர்க்கும் முறை தீதோ?
காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
கருக்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
ஓதலுக் கெல்லாம் மறுப்பா? என்னருமை நாடே,
உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:33 pm)
பார்வை : 18


மேலே