வீரத்தாய்!

தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:27 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே