சீறி எழுந்திடடா!

முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச்
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா!

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில்
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா!

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:27 pm)
பார்வை : 29


மேலே