காலையும் களமும்

கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:27 pm)
பார்வை : 20


மேலே