ஒரு பொது மகளின் புலம்பல்!

* "கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித், தம்இல்
ஆடிப்பாவைபோல,
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே!"

(குறுந்தொகை:பாடல்:8:பாடியவர்:ஆலங்குடி வங்கனார்)

பொருள் விளக்கம்:
கழனிமா அத்து விளைந்து உகு தீம்பழம்=கழனியருகே உள்ள மாமரத்திர்ல பழுத்து விழுகின்ற இனிய பழம்.
பழனவாளை கதூஉம்=பக்கத்துப் பொய்கையில் உள்ள வாளைமீன் கவ்விக்கொள்ளும்.
ஆடிப்பாவை= கண்ணாடியில் தோன்றும் உருவம்.

வயலின் ஓரம் வரப்புகள் மீது
வளர்ந்து நிற்கும் மாமரக் கொப்பில்

உண்ணத் தெவிட்டா ஒட்டுமாங்கனிகள்
வண்ண மாதர்கள் பெருந்தனம் போல

காய்த்துக் குலுங்கி கடைசியில் அவகள்
கயல்கள் ஆடும் கழனியின் பக்கம்

வாவியின் நீரில் வளைந்து துள்ளும்
வாளைமீன் விழுங்கி மகிழ்தல் இயல்பே!

அவ்வாறே,

வாணன் என்னும் இவ்வூர்த்தலைவன் - காம
பாணன் தைத்தது என்று; உள்ளம்

கருகி வந்தான்! கருணை செய்க என்றே - என்முன்
உருகி நின்றான்!

வாளைமீன் வாய்க்குள் மாம்பழமொன்று
வலிய விழுந்தால் சும்மா விடுமா?

காளை அவன்; என் மடியில் வீழ்ந்த
கதையும் இதுதான் தோழி!

பிறகென்ன; நான் அவனை
உறவென்று உரைத்தேனா? அல்லால்

வரிசை வைத்து வா என்று அழைத்தேனா? விழி
வலையை வீசி வஞ்சித்துப் பிடித்தேனா? - என்

பொலிவைக் காட்டிப் பொடிபோட்டு இழுத்தேனா? ஒரு
புன்னகை வீசி அந்தப் "புனிதனைக்" கவிழ்த்தேனா?

வசைபாடி எனைத்தாற்றும்
வாணன் மனைவியிடம் கேள்! - இன்ப

இசைபாடிக் களிப்போம் எடனறு;
இரவலன் போல் கெஞ்சியது யார்?

வந்த வாணன் எனைநோக்கி
நொந்த மனத்துடன் சொன்னது என்ன?

"கட்டிலுக்குத் துணையாய் வாய்த்த மங்கை - பிள்ளைத்
தொட்டிலுக்கு முழுநேரக் காவல் ஆனாள்!

தொடர்ந்து பலநாட்கள் பட்டினியால் வாடி - இன்று
துணிந்து உனைத்தேடி இன்பம் பருகவந்தேன்!

கட்டியணைத்துக் காய்ச்சல் போக்கி - மார்புக்
கச்சை அவிழ்த்துக் காமநோய் தீர்த்திடு" என்றான்.

ஒப்பினேன் நானும் - பொன்னால்
உப்பிய பையை உதறினான் என்மேல்!

பரத்தை நான் எனினும் உன்பால் பற்றுவைத்த பின்னர் - என்
தரத்தை உணர்வாய்; தாகம் தணிக முதலில் - என்றேன்!

தட்டிலே உள்ள சோற்றைப் பசியால் உண்ணப் பறந்து
கொட்டிக் கவிழ்த்த ஒரு குழந்தையைப் போலே

பரபரப்புணர்வுடன் பாய்ந்தான் என்மேல் - நான்
பயத்தால் நடுநடுங்கிப் போனேன் எனினும் - எனக்குப்

பழகிய கலைதான் என்ற துணிவில்
படுக்கைப் போட்டியில் சமமாய் நின்றேன்!

பலாச்சுளை - தேன்கதலி - தினைமா - என்று
பலநாள் இன்பம் பகிர்ந்து மகிழ்ந்தோம்!

திடீரென்று ஒருநாள்

தெவிட்டியதாலோ அல்லது அவன் தேவியாம் திருமகள்
தேடி அலைகிறாள் என்ற செய்தி தெரிந்ததனாலோ;

தேர்ஏறிப் போன வாணன்,
திரும்பவே இல்லையடி!

பொருள் மட்டும் தரவில்லை; என்னைப் பொதுமகள் என்னும்
இருள் விரட்டும் ஒளிப்பிழம்பாய் அருகிருந்தான்.

உருள்கின்ற காலத்தின் கோலம் பார் -
சுருள்கின்ற கத்திபோல நாக்குச் சுழலும்.

ஆடவனின் பாராட்டெல்லாம் - பஞ்சணையில்
கூடுகின்ற நேரத்தில்தான்!

அதன்பின்னர்ப் புதன் வருவேன்; வியாழன், வெள்ளி வருவேன் என்று
அடுக்கடுக்காய் நாள்குறித்து "சனி" காணாமற்போய் விடுவான்.
குறைசொல்லி அவனைநான் குமுறுவதால் பயனில்லை தோழி!
பறைமுழக்கி ஊர்கூட்டி என்மீது பழியுரைக்கும்

கல்நெஞ்சக்காரி இருக்கின்றாளே; அவன்துணைவி
கண்ணீரையே கயிறாய்த் திரித்து அவனைக் கட்டிப்போடுகின்றாளாம்!

கண்ணாடி முன்நின்று ஒருவர்
கண்டபடி அங்கங்கள் அசைத்திட்டால்

கண்ணாடியில் தோன்றும் உருவும்
கச்சிதமாய் அவ்வாறே அசைத்திடுமே!

அதுபோலத்தான்

அவளோ கண்ணாடிக்குமுன் அசைகின்ற அம்மை!
அவனோ அந்த அசைவுஅனைத்தையும் பிரதிபலிக்கும் பொம்மை!

காத்திருந்து இனி என்ன பயன்?
பூத்திருக்கும் முல்லை நான் - இதழ்

மதுவுண்டு செல்வதற்குப்
புதுவண்டு வராமலா இருந்து விடும்!

கலைமகளாய் மாற்றம் பெறக் கனவுகண்டேன்; ஆனால்
விலைமகளாகவே வாழ்க என்று

வாணன் வாழ்த்திவிட்டான்; அந்த
வீணன் வாழ்க நன்று!"

இவ்விதம் ஒரு காதல் பரத்தை
இதயத்துயர் எடுத்துச் சொல்லி

ஆருயிர்த் தோழியிடம் அலறிப் புலம்பியதை
ஆலங்குடி வங்கனார் எனும் புலவர்

தங்கத் தமிழ் உவமை கூறி
சங்கக் கவியாய்த் தருகிறார் இங்கே!
( நன்றி: சங்கத் தமிழ் )


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:24 pm)
பார்வை : 131


மேலே