வாணன் மணந்த வண்ணத் திருமகள்

* "நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசுபட்ட டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனம் அல்லேம்; அதனால்
பொன்புரை நரம்பின் இன்குரல் சிறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழா அல்;
கொண்டுசெல் பாண! - நின் தண்துறை ஊரனை
பாடுமனைப் பாடல்; கூடாது நீடுநிலைப்
புரவியும் பூண்நிலை முனிகுவ,
விரகுஇல மொழியல், யாம் வேட்டதில் வழியே."

(நற்றிணை: பாடல்: 380; பாடியவர் : கூடலூர்ப் பல்கண்ணனார்)

பொருள் விளக்கம்:
குய்= புகை. கலிங்கம்= ஆடை. திதலை= தேமல்.
பிலிற்ற=சுரந்து பீச்சிட. புல்லிப் புனிறுநாறும்= (மகனை)
அணைத்துப் பால் கொடுத்ததால் ஏற்படும் பால்வாடை
வாலிழை=ஒளிவிடும் அணி.

குலவும் கிள்ளை - குடும்பப்பாவை -
உலவும் தென்றல் - உதய தாரகை - அந்த

மலரை மணந்தான் ஒரு மருதத்தலைவன் - இந்த
உலகை மறந்தனர் இருவரும் இரவில்!

இலவம் பஞ்சுப் படுக்கைப் பள்ளியில் - கலைகள்
பலவும் கற்றார், கற்றார், நாளும் கற்றார்!

கட்டிலில் கற்றது கைம்மண் அளவே - இன்னும்
கல்லாதன கடல்மண் அளவே - இதனைப்

பட்டுமேனிப் பத்தினிக்குரைத்து
பற்பல கோடி இன்பம் தந்தான்.

கொஞ்சிப் பிணைந்த குடும்பக் கொடியில்
பிஞ்சு போன்று ஒரு பிள்ளை உதித்தது.

மஞ்சம் சிலநாள் ஓய்வு பெற்றதால்
மணாளன் தவித்தான் தனிமைத் துயரில்!

மரத்தை வெட்டும் கோடரி போல - அவன்
மனத்தை வெட்டும் காமக்கிளர்ச்சி!

அறத்தை மறவா அவன் இல்லக்கிழத்தி,
சிறுத்தைப் புலியாய் மகனை வளர்க்க -

கனத்த தனங்களில் பெருகும் பாலை,
கருத்த காம்பின் வழியாய்க் கொடுத்தாள் - அதனை

நினைத்த போதெல்லாம் எச்சிலால் நனைத்து
இனித்த சுகத்தை இழந்த கணவன்

தணலாய்க் காமம் தகித்தது கண்டு -
தாகம் தணிக்கப் பெரும் மோகம் கொண்டு;

பரத்தை ஒருத்தியின் படுக்கையில் விழுந்தான் - அவன்
கரத்தைப்பற்றி அவளும் காதலைப் பொழிந்தாள்.

காலை, மாலை, இரவு, பகல் என்ற கணக்கேயின்றி
காம லீலையில் கழிந்தன நாட்கள்!

மூலையில் அமர்ந்து வாடுகின்றாள் - அவன்துணைவி
பாலையில் வெண்ணெய்போல் உருகுகின்றாள்!

அவளிருக்கும் நிலைமைதனை அறிந்ததாலே
அவசரமாய்ப் புறப்பட்டான் தேர்ஏறி!

பாணன் ஒருவனைப் பக்குவப்படுத்தி
பாவையின் கோபம் தணிக்கச் சொன்னான்.

இசைப்பாணன் அவள் இல்லம் சென்றான்.
இங்கிதமாய் எவ்வளவோ எடுத்துரைத்தான்.

இல்லக்கிழத்தியோ இறவாச் சினமுடன்
இலைமறைகாய் என எதுவுமின்றி

எல்லா விபரமும் எடுத்தியம்பிப்
பொல்லாக் கணவனைப் புறக்கணிக்கின்றாள்.

பல்கண்ணனார் என்னும் புலவர்,
பாடிய சங்கப் பாடலில் இப்படிப்

பாணன் ஒருவனிடம் தனது நிலையைப்
பட்டவர்த்தனமாய்த் தலைவி சொன்னதாய்ச் சொன்னதை மாற்றி

கற்பனையொன்றைத் தீட்டிட முனைந்தேன்
கருப்பொருள் எதுவும் கெடாதவாறு!

பரத்தையின் இருளை விட்டகன்ற வீரன்,
பத்தினி விளக்கைப் பார்க்கத் துடித்தான்.

பாணனை அனுப்பினால் தூது பலிக்காமற் போகலாம்; அந்தப்
பயத்தால் திகைத்துப் பற்பல சிந்தனை செய்தான் - முடிவில்,

ஒரு பாணன் போல் உருமாற்றங் கொண்டு
திருமகள் என்ற தன் தேவிமுன் சென்றான்.

"யார் நீ? யாது வேண்டும் உனக்கு?" என்று
பார்வையொன்றால் அந்தப் பாவையும் கேட்டாள்.

"குலவிளக்கே! குங்குமச் சிமிழே! உனைக்
கொண்ட கணவன் அனுப்பினான் என்னை!

விலைமகளோடு போன துணைவன் வருவான் மீண்டும்! நீ;
நிலமகள் போலப் பொறுமையைப் பூண்டு,

வளைக்கரம் நீட்டி வரவேற்றிடுக என்று -
களைத்தமிழ்ப் பாட்டை யாழுடன் இசைத்தான்.

பொதுமகளை நாடி அவன் ஓடியதைப் பொறுத்திடுக!
புதுமனிதனாய்த் திரும்பி வருகின்றான்; அவனை

மன்னித்தேன் என்றுநீ உரைத்துவிட்டால் - உனை
அள்ளித்தேன் பருகுதற்குத் தயங்கமாட்டான்."

இசைமீட்டி இவ்வாறு
பாணன் வேடத்தில் பரிந்துரைக்கும் சாகசத்தை
வாணன் எனும் தன் கணவன்தான் நடத்துகின்றான் எனத் தெளிந்தாள்.
இசைப்பாணன் அல்ல அவன் எனத் தெரிந்தபின்னர்,
மணவாளன் முன்பேச என்ன அச்சம்! - அதனாலே

மனத்தில் உள்ள கொதிப்பை எல்லாம்
மாதரசு கொட்டித் தீர்த்தாள்.

"சிறியாழ் மீட்டுகின்ற பாணரே!
சிர்குலைந்த என் நிலையைப் பாரும்!

காய்ச்சுகின்ற நெய்யும்
கரும்புகையும் பட்டதாலும்,

கற்கண்டாம் என் பிள்ளைக்குக்
கண்ணோரம் மைஎழுதி விட்டதாலும்

அழுக்குப் படிந்து ஆடையெலாம்
அழகற்றுப் போனதய்யா!

தேமதுரக் குழந்தையின் பசிதீரக் கொடுத்தபிறகும்கூட
தேமலழகுக் கொங்கையினில் சுரக்கின்ற பால்பெருகி,

தோகையென் தோள்மீதும் மார்பினிலும் வழிவதாலே - உம்
தோழருக்குப் பிடிக்காத முடைநாற்றம் வீசுதய்யா!

எனவே எனைவிடுத்து,
அணிமணிகள் ஒளிவழங்க
ஆடிப்பாடிக் களிப்பூட்டித் - தும்பைப்பூத்

துணிமணிகள் காற்றில் பறக்க
ஆள்மயக்கும் விழிகாட்டும்

விலைமகளிர் வீதிக்கே - அவரை
விரைந்து திரும்பச் செய்திடுவீர் - இம்மனையின்

தலைமகனும் என் கணவர் உம்கையில்
தரும் பொன்னைக் கூலியெனப் பெற்றுக் குதித்திடுவீர்!"

இல்லாள் வெகுண்டெழுந்து இதைச் சொல்லி முடித்தவுடன்
பொல்லாச் செயல் புரிந்த துணைவனவன் நடுங்கிப் போய்

"நில்லாது இனி என் உயிர் கண்ணே!" என்று
நெடுமரமாய் அவள் தோளில் சாய்ந்தபடி,

அணிந்துவந்த பாணன் வேடம்
அரைநொடியில் கலைத்து விட்டான்.

துணிந்து சென்று தொகை வழங்கி இன்பம் பெற்று - இன்று
பணிந்து வந்து பாணன் உருவில் கெஞ்சுகின்ற

வாணன் மீது வஞ்சம் தீர்க்க வழியே இன்றி,
"வாழ்க" என்று திருமகளும் தழுவிக் கொண்டாள்.

குழந்தையொன்று குறுகுறுவெனப் பார்ப்பதையும் மறந்து - உடல்கள்
அழுந்த அணைத்தனர் - அதைத் தொடர்ந்து அகல் விளக்கையும் அணைத்தனர்.


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:25 pm)
பார்வை : 113


பிரபல கவிஞர்கள்

மேலே