தேடுவதில் தொலைகிறதென் காலம்

யோனி திறந்து புழுதியில் வீழ்ந்ததும்
‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’
சப்பாணிப் பருவத்து உப்புப்
பரல் போட்டாற்றிய வடித்த கஞ்சி
நடையும் கழுத்தும் உறைத்தது
மூத்திரம் ஊறிய சாணம் சுமந்து
ஆற்று நீரில் அலசிப் போட்ட
குண்டித்துணி உலர்த்தும் சுடுவெயில்
பத்தும் தண்ணியும் பரசிக் கொண்டிருக்கையில்
கதித்து ஏறிய முதல் மணி முழக்கம்
பிடரியில் குதிங்கால் கடந்த பாதை
எண் சுவடி வாய்ப்பாடு மனப்பாடம்
சந்தி சாரியை திரிபு விகாரம்
உகாரம் ஆகுபெயர் அளபெடை
பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை
பிரம்பு வீச்சில்
நல்வழி நானூறு நாலடி
தூது உலா அந்தாதி கலம்பகம் பரணி
பள்ளு பிள்ளைத் தமிழ் ஓர்ந்து கற்றதில்
தொலைந்ததோர் காலம்

திராவிடம் தனித்த தமிழினம் தேசீயம்
தனிவுடைமை பொதுவுடைமை தன்னாட்சி
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
கருணைக்கடலான யதேச்சாதிகாரம்
மாயக்கம்பளம் என்பதோர் மக்களாட்சி
கொள்கை விளக்கக் கூற்றுகள்
வெட்டி விதைத்து வீதியில் கிடக்க
இன்னதென அறியாது ஏமாந்து
தொலைந்த்தோர் காலம்

பொதுத்துறை இரயில்துறை வனத்துறை
வருமானவரித்துறை கல்வித்துறை
போக்குவரத்துத்துறை பொத்துவரத்துத்துறை
மலேரியாக் கொசுவுக்கு மருந்தடிக்கும் துறை
குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆட்பிடிக்கும் துறை
எனப்பற்பல பிழைப்பு பாழில் தேடி
பல்லாயிரம் காதம்
பரந்ததோர் காலம்

எதையும் கடிக்கும் எயிற்றின் தினவென
பால் கிளைத்த வயதின் மறுகால்
சினிமா தொடர்கதை பாட்டு எனப் பல
அலவு பிளந்து அளந்து ஊற்றிய
அமரக் காதல் ஆன்மீகக் காதல்
தெய்வீகக் காதல் இதிகாசக் காதல் எனக்
கானல் தேடி ஓடிய மானெனக்
களைத்துத் தோற்றுக்
கடந்ததோர் காலம்

சேதனம் அசேதனம்
தாவரம் சங்கமம்
சங்கநிதி பதுமநிதி
மெல்லிடையாள் பொன் முகத்தாள்
நாறும்பூ நன்முத்தம்

சூரியக் கதிரென மேன் மக்கட் பேறு
உணவோ அமிழ்தினும் இனிது
யாக்கை பொதிய நிலவின் கீற்று
நவமணி ஆடகப்பொன்
சற்றைக்கு முன்பே சந்தைக்கு வந்த
கைபேசி படக்கருவி பச்சைப் பிள்ளையாய்
தொடை மேலமரும் கணிப்பொறி
தாளமிட்டுத் தலையும் ஆட்டி
நடக்க ஓடப் பணியாற்ற
உண்ண உரையாட உடலுறவு கொள்ள
செலவாதி போகப் பயணம் செய்ய
நுண்மின் இசைக் கருவி என வாங்கித்
தொலைந்ததோர் காலம்

வெம்பிய உடலும் கூம்பிய மனமுமாய்
அச்சு முறிந்து ஐயோவேன்றானபின்
தியானம் யோகம் நியமம் குண்டலினித்
தேரோட்ட முனைந்ததோர் காலம்

இனம் மொழி சுத்த சத்தியம்
பண்பாடு மனுடமாண்பு கவின்கலைகள்
பசுமை காடு நீர்மை புற்பூண்டு கானுயிர்
மெய்யன்பு சகல உயிர்க்கும்
அகம் புதுக்கும் ஆன்மீக இசை
ஏகவேளியின் வானவர் அமுதம்
கபால உச்சியின் கதவு திறந்து
ஊனில் ஊறி உயிரிற் பெருகி
சாகாவரமும் சடையா உடலும்
அமரப் புகழும் அளப்பரும் செல்வமும்
கொணர்ந் தீங்கு சேர்க்கும் என்று
தேடுவதில் தொலைக்கிறதென் காலம்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 5:18 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே