ஆலகாலம் - பச்சை நாயகி

ஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு
பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து
அட்டமா நாகங்கள்
அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன்
பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன்
என்பாரில்
ஆதிசேடன் அருமைத் தம்பி
வாசுகி வடம்
மத்து மூழ்காத் தாங்கு என
மிதக்கும் கூர்மம்
அசுரர் ஓர்பால் தேவர் மறுபால்
கிருத யுகத்தில் கடைந்தனர்
பாற்கடல்
திரண்டு எழுந்த
ஆல காலம்
முதலில் வந்தது
ஆதிசிவன் கண்டத்துள்
தங்கிற்று

தொய்வற்று தொடரும்
கடைதொழில் கலியுகத்தும்

அதிகார இனத் தாம்பு
பெருந்தொழில் நிறுவன மலை
அடிதாங்கத் தரகு ஆமை
முரண் முற்றி
பகை சுரந்து
மூர்க்க தீ உமிழ்ந்து
ஆளும்
ஆண்ட
ஆசைகொண்ட
சுயநலக் கயமைக் கரங்கள்
முன்னும் பின்னுமாய்ப்
பலம்கொண்டு பற்றி வலித்து
மக்களாட்சிப்
பாற்கடல் துழாய்ந்து கடைய
யாவும் வந்தன

செந்திரு கெளத்துவம் இந்திராணி
சந்திரன் ஐரவாதம் உச்சைச் சிரவம்
ஐந்தருக்கள் வாருணி தேவமாதர்
அமுத கலசம்
எனவாங்கு

பிள்ளை கட்கு பெயரர்க்கு பங்காளிகட்கு
தாயாதிகட்கு கூட்டாளிகட்கு நண்பர்க்கு
அடியாரில் நல்லார்க்கு நச்சிய இனியவர்க்கு
துதிபாடிகட்கு தூமை குடித்தவர்க்கு
எடுபிடிகட்கு ஏவலர்க்கு
காதலர்க்கு தரகர்க்கு
அவர் பெயரில் தம்தொழில் முனைவோர்க்கு
பூசாரிகட்கு புன்தொழிற் போற்றும்
புலவர்க்கு

பங்கு பங்காக பகிர்ந்து கொடுத்துக்
குறையொன்றும் இல்லை நிறைமூர்த்தி கண்ணா!

தென்னிலங்கைச் செற்றானே தாலேலோ!
தேவர் குறை தீர்த்தானே தாலேலோ!

காலம் தேர்ந்து
கடைசியில் வந்த்து கொடு நஞ்சு

வயிறு பசித்திருந்த தொல்குடிகள்
இருகையால்
வாரி உண்டனர்

கண்டத்துத் தாங்காது இரைப்பைக்கு
இறங்கியது
கொல்விடம்
நீலம் வலுவாய்ப் படர்ந்து
எங்கும் ஏறிற்று


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 5:18 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே