மனிதனும் பறவையும்
சாலையோரம் கிடக்கிறது
அந்தக் காக்கை
அனாதைப் பிணமாக.
சற்று முன்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
அதன் மரணம்.
விபத்தா?
எதிரிகளின் தாக்குதலா?
இயற்கை மரணமா?
எதுவென்று தெரியவில்லை.
மரக்கிளைகளில் மதில்சுவர்களில்
கரைந்திரங்கல் தெரிவித்து
கலைந்து போயிற்று
உறவுக்கூட்டம்
அனாதையாகக் கிடக்கிறது அது.
சற்று முன்னதாக
ஏதேனும் வீட்டு வாசலில்
அல்லது கொல்லை மரக்கிளையில்
உறவின் வருகையறிவித்து
அதற்கான உணவை
யாசித்திருக்கலாம்.
செத்துக்கிடந்த எலியை
இனத்துடன் சேர்ந்து
கொத்திக் குதறியிருக்கலாம்.
மைனாக் குருவியை
விரட்டிச் சென்றிருக்கலாம்.
கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.
தன் ஜோடியுடன்
முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.
கூடுகட்ட நினைத்திருக்கலாம்.
இப்போது அனாதையாய்
இந்தச் சாலையோரம்.
மனிதன் இறந்துகிடந்தால்
காவலர் தூக்கிச்செல்வர்.
அற்பப் பறவையிது.
கவனிப்பாரில்லை.
சற்று நேரத்தில்
நாயோ பூனையோ
கவ்விச் செல்லலாம்.
குப்பையோடு குப்பையாய்
மாநகராட்சி வாகனத்தில்
இறுதிப்பயணம் செய்யலாம்.
அற்பப் பறவையன்றோ அது.