தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
வாழ்வு
வாழ்வு
அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பில் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர்
மானத்தில் வாழ்வது வாழ்வு!
உச்சி மலைவிளக் காக-உல
கோங்கும் புகழ்கொண்ட தான
பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!
மூதறி வுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின்-முன்
கண்டதை ஒவியம் ஆக்கும்
பாதித் தொழில்செய லின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!
ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயன வாம்என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!