இயற்கைச் செல்வம்

விரிந்த வானே, வெளியே, - எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய், நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய!
பசையாம் பொருள்கள் செய்தாய்!-இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 2:52 pm)
பார்வை : 54


மேலே