தமிழ் கவிஞர்கள்
>>
காசி ஆனந்தன்
>>
செருக்களம் வா!
செருக்களம் வா!
மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு
சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?
கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?
தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!
நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!
தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!
ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!
தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!