தாயே!

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்

தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்

என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே

உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!

கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்

நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது

தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!

வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்....
வீரமேன் கொடுத்தாய் தேவி?

பாரம்மா.....முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்து

சேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே

பாரம்மா....மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை....வீதி

ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!

மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!

தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!

ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!

ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:39 pm)
பார்வை : 33


மேலே