போர் முரசு!

வளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு

கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்

சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! - வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் - புகழ்
பேண மறந்துவிட்டோம்! - இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:38 pm)
பார்வை : 19


மேலே