ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி!

" முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங்காமையின் ...............................
..................................................................
................................. பாண ! தங்காது
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே."

(புறநானூறு : பாடல் : 320
பாடியவர் : வீரைவெளியனார்)

பொருள் விளக்கம் :

கைம்மான் = யானை. கனைதுயில் = மிக உறக்கம்.
பார்வை மடப்பிணை = விலங்கினமான இளம் பெண்மான்.
கலை = ஆண்மான். இல்வழங்காமையின் = இல்லத்தை விட்டு வெளியே நடமாடாமல் ஒருபுறம் ஒதுங்கி அமைதல்.
தங்காது = குறையாமல். வேந்துதரு விழுக்கூழ் = தனக்குப் பகை வேந்தர் கப்பமாகத் தந்ததும், தன் வேந்தர் தந்த பரிசுப் பொருளும்.

குறிப்பு : வீரைவெளியனார் தோன்றிய வீராம்பட்டினம் புதுவைக்கு அருவே உள்ளது என புறநானூறு உரை கண்ட அறிஞர் ஒளவை துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.

வீராம்பட்டினமென்பது புதுவைக்கருகில்
விளங்கிடும் ஊராம் - புலவர் பிரான்
வீரைவெளியனார் தோன்றிய இடமென, இதனை
விளக்குவர் அறிஞர்!
தித்திக்கும் கவிதை தீட்டி அகத்துறையில் புகழ்பெற்ற
தித்தனார் எனும் கவிஞர் இவர் பெற்ற மகனேயாவார்.
திறன்மிக்க மகனை ஈன்ற வெளியனாரும்
புறப்பாட்டில் ஒரு புதுமைதனைக் காட்சியாக்கி,
வேட்டுவர் இல்லத்துப் பெண்விளக்கின் மாண்புதனைக்
காட்டுகின்றார் கவிதை ஒளிக் காவியமாய்!

வேந்தனிடம் விடைபெற்றுக் களம் சென்ற தளபதி
வெற்றியினை மாலையாக்கிச் சூடிக்கொண்டு
விருதுபல பெற்று வீரக்கொடி விண்தவழ
வீடு திரும்பினான் என்ற செய்தி கேட்டு - அவனைப்
பாடிப் பரிசில் பெற பாணன் ஒருவன் சென்றபோது - அவன்
நாடி வந்த தளபதியின் நல்நெஞ்சக் கொடை இயல்பை
நற்றமிழில் பாடுகின்றார், வீரை வெளியனார்.

வெற்றி பெற்ற நாட்டுப் பொருள்களையும் - நமது
வேந்தர் வழங்கியுள்ள விருதுப் பொருள்களையும்
ஈந்து சிவந்திட இரு கரமும் கொண்டவன்தான்
பாய்ந்து பகைவீழ்த்தி வந்துள்ள வீரன் எனப் புகழ்ந்து - அன்பு
தோய்ந்து இதயமுடன் அள்ளித் தருவான் பரிசுகளை என்று,
ஆழ்ந்து அறிவுசால் வீரைவெளியனார், பாணர்க்கு அறிவித்து மகிழ்ந்து,

அவ்வூரின்கண் அரும்பிமலர்கின்ற
அழகு மகளிர் பண்பு நலமும் பாடுகின்றார், கேளீர்!

முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும்
பின்னிப் படர்ந்து விரிந்து பரந்ததால்
பந்தல் என ஒன்று வேண்டாம் வெயில் மறைக்க என
பலாக்கனிகள் தொங்குகின்ற அடர் மர நிழலில் கீழே

வேடனொருவன் உறக்கத்தைத் தழுவிக்கொண்டு,
வேல்பிடித்த கரத்தைக்கூடத் தளர்த்திக் கிடந்தான்.
வேலுக்குப் பதிலாக அவனருகே படுத்துக்கொள்ள
சேலுக்கு இணையான விழிபடைத்த அவன் துணைவி, விருப்பங்கொண்டு;

மெல்ல நடந்து இல்லத்துக்குள்ளிருந்து - அந்த
வெல்லப்பாகு இதழாள்; கொடிப்பந்தல்தனைக் கூர்ந்து நோக்குகின்றான்.

களைப்புற்ற கணவனருகில் ஒரு மலர் போல ஒலியின்றி பட்கார வேண்டுமென்றும்,
கண்களின் பசி தீர அவன் கட்டழகைப் பார்த்துக் களித்திட வேண்டுமென்றும்,

தாமரை மொட்டிரண்டைச் சற்றுத் தாமதாய் அவன்
தடந்தோளின் பக்கம் திருப்பினால் போதுமென்றும்,
அவசரப்பட்டு ஒரு முத்தம் அரும்பு மீசை உதட்டின்மேல்
அளித்துவிடின், அவன் விழித்துக்கொள்ள நேருமென்றும்,
ஆனைகளை வேட்டையாடி அயர்ந்து தூங்கும்
ஆளனது ஓய்வு கலைத்தல் அவன் உடல் நலனுக்கு ஆகாதென்றும்,

முழுத் தூக்கம் முடியட்டும்; பின்னர் காலைக்கதிர்
எழுமட்டும் முடியாமல் தொடரலாம் இன்பமென்றும்,
தொலைவில் நின்று அத்தோகை நல்லாள் - காற்றில்
அலை அலையாய் எழுகின்ற கருங் கூந்தல் கோதி,
எண்ணமிட்டு நின்றிருந்தாள் - அவள்
வண்ணமிட்ட மார்பகமோ உயர்ந்துயர்ந்து உயிரை வாங்கித்
தணிந்து, பின்னும் உயர்ந்தெழுந்து மேன்மேலும் அவள்
தணியாத தாபத்தை வெளிப்படுத்தும்!
துணிந்து சென்று சென்று அவன்மேல் வீழ்ந்துவிட்டால் - நல்ல
தூக்கத்தைக் கலைத்த குறை, அவள் மனதைக் குடையும்!

அதனாலே

அவனருகிற் சென்று அசையாமல் படுத்துக்கொண்டு
அயர்வு நீங்கி அவன் விழிப்புற்றுப் புரளும்போது;
அத்தான் என அழகு விரல்களாலே முகம் தடவி
முத்தாக ஒரு முதூதம் கொடுப்பதென முடிவு கட்டி,
காட்டு வழியில் தேய்ந்து காய்த்துப்போன கால்களையும்
காய்ந்த சருகுகளின் மேல் பூப்போல ஓசையின்றி ஊன்றி,
விழிமூடித் துயில் கொள்ளும் வேடனிடம்; தொப்புள்
சுழியின் எழில் மூடாமல் சுகந்தமிகு வசந்தமென நடக்கலுற்றாள்!

அப்போது,

பலாக்கனிகள் குலுங்குகின்ற மரநிழலில்
படர்ந்திருக்கும் கொடிகள் நிறை இலைமறைவில்
படுத்திருக்கும் வேடனுக்கு மிக அருகாமையில்
தடுத்துரைத்த பெண்மான் ஒன்றைத் தழுவிக்கொண்டு
ஆண்மான் தந்த அருஞ்சுகத்தை, இழப்பதற்கும் மனமின்றி, - அந்தப் பெண்மான்
வீண் முயற்சி எடுத்து மீண்டும் தடையொன்றும் சொல்லாமல்,
இருமானும் இன்பத்தின் உச்சியிலே மிதந்து
தருநிழலில், தவமிருந்து வரம்பெற முனைவோர் போல - தலைமறந்த நிலையுற்ற,
இயற்கையின் திருக்கூத்தை அந்த இல்லத்தரசி
இருவிழி கொட்டாமல் பார்த்தயர்ந்தாள் !

உடனே

அவளுக்கோர் அச்சம் உள்ளத்தில் வெளிச்சமிட
அப்பால் ஓர் அடிதனை எடுத்து வைக்கவும் தயக்கமுற்றாள்!

பலாமரத்து இலைச்சருகுகளில்
படர்ந்துள்ள கொடியுதிர் மலர்களில் - தனது
பாதம் படுகின்ற சிறிய ஒலி கூட;
இசை மூடி இவ்வுலகை மறந்து துயில்கின்ற
இளமை மிகு வேடனையே எழுப்பிவிட்டால்,
ஆர்த்தெழுகின்ற அவன் தோற்றம் கண்டு - காதல்
போர்க்களத்து வெற்றிக்குப் போட்டியிடும்
ஆண்மானும் பெண்மானும் அடைய இருந்த இன்பமெலாம்
ஊண் பொங்கும் நேரத்தில் உலைப்பானை கவிழ்ந்தது போலாகி
ஓடி உயிர் காத்துக் கொண்டாலே போதுமென இருமானும்
வாடிப் பிரிய நேரிடுமே எனவும் எண்ணினாள்; அல்லது
வேடன் எழுந்தவுடன் அருகிருக்கும், தனது
வேலை எடுத்து வீசிவிட்டால் - காதல்
பாடந்தனைச் செயல் மூலம் பயிலுகின்ற ஈருயிரும்
கலவி நடுப்பாதையிலே பலியாக வேண்டும் என்றும்
கவலை மிகக் கொண்டுவிட்டாள்!

இவையிரண்டு தீங்கினையும் தவிர்ப்பதற்குத் தக்க வழி
இங்கேயே நான் மறைந்து நிற்பதுதான், என்று
அசையாத சிலைபோல இருந்துவிட்டாள் - தெவிட்டாத
இசைபோல வீசும் தென்றல்; அவள் பண்பை வாழ்த்திப் பாடிற்றாங்கே!
மானினத்தின் உணர்வுக்கு மதிப்பளித்துக் கருணைதனை
மழையாகப் பொழிகின்ற மாதரசு வாழ்கின்ற இவ்வூரில்
மானிடராம் பாணர்க்குப் பரிசு இல்லை என மறுப்போர் உண்டோ?
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியைப்
பாவை இவள்தான் மெய்ப்பிக்கின்றாள் என்று
பாணர்க்கு அவ்வூரின் பண்பாட்டை வீரவெளியனார் எடுத்துக்காட்டி
பரிசுபெறச் சென்றிடுவீர் பகைமுடித்த தலைவனிடம் எனக்கூற
விரைந்திட்டார் வேகமாகப் பாணர்; வீர
வெளியனார்க்கு நன்றியினைக் குவித்தவாறு!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:27 pm)
பார்வை : 102


பிரபல கவிஞர்கள்

மேலே