உள்முகம்

வருந்தாதே வைரமுத்து!
வாய்ப்பிழந்து போகவில்லை
இக்கணம் நினைத்தாலும்
நீ அழுக்கறுக்கலாம்

காலத்தின் ஒரு பகுதி
நீ கடந்திருப்பது
வாழ்வைச் சலவைசெய்து
உடுத்தும் வயது

தோல் சுருங்காமல்
உள்ளே பழுத்திருக்கும் மனது
இன்று தெளிந்தாலும்
நீ முழுமை நோக்கி
முதலடி வைக்கலாம்

* * * * *
காலமுனக்குச் சிறகுதந்தது
ஈக்களோடு பறக்கவல்ல
குயில் நீ!
முப்பதுநாளும் முட்டையிடும்
கோழியல்ல

எப்படித்தான் சகிக்கிறாயோ?
கருவாட்டுச் சந்தையில்
ரோஜா விற்கிறாய்

ஒருவகையில் நீ புத்திசாலி
சந்தையில் சம்பாதித்தவர்க்கிடையில்
ஒரு
சந்தையைச் சம்பாதித்தவன்
* * * * *
சந்தைப் பொருள் செய்யவோ
ஜனித்தாய் நீ?
சந்தைசேராத பொருளெதுவோ
அதுவன்றோ உயர்ந்த பொருள்?

எந்தச் சந்தையில் வாங்குவாய்?
சிறகுள்ள காற்றை...
சிதறும் மழையை...

இரவில்
பூமிக்கு ஆகாயமூட்டும்
ஒற்றைமுலைப் பாலை...
மொட்டின் மலர்வை...
சூரியப் புலர்வை...
எந்தச் சந்தையில் விற்பாய்?

உன்னெழுத்து ஒவ்வொன்றும்
காற்றாய் மழையாய் நிலவாய் மலராய்

சூரியப் புலர்வாய்ச்
சுடர்கொள்ள வேண்டுமெனில்
சந்தைக்கு வெளியே தமிழ் செய்

உன் போதிமரம் தேடு
உட்கார்
உலகக் காற்றையெல்லாம் உள்ளிழு

வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி

ஊன் உருக்கு
உள்ளளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
* * * * *
சில காலம்
எழுதுகோல் மூடிவை
கல்வியின் கர்ப்பத்தில்
மீண்டும் கண்வளர்

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
மனிதரோடு மெளனவிரதமிரு
ஜீவராசிகளோடு பேசு

ஓரிடமிராதே
ஓடு....ஓ....டு
ஒருநாள் நதிக்கரை
ஒருநாள் சுடுகாடு

ஒருநாள் ஒரு குகைப்பிளவு
ஒருநாள் ஒரு மரக்கிளை
பன்றிபடுக்கும் திண்ணை ஒருநாள்
ஆட்டுக்கிடையில் அடுத்தொரு நாள்

சுக்காகட்டும்
உடம்பும் மனசும்
இதுவரை
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ.

அதன்பின் எழுது
அன்று சுருக்கும்
உன் பேனாவில்
உலக மானுடம்
பருகும் ஞானப்பால்.


கவிஞர் : வைரமுத்து(4-Jan-12, 11:49 am)
பார்வை : 81


பிரபல கவிஞர்கள்

மேலே