தமிழ் கவிஞர்கள்
>>
பா.விஜய்
>>
நிழல் தேடாதே
நிழல் தேடாதே
நிழல் தேடாதே
உன் நிழலில் ஒரு
ஊரையே நிற்கவை !
முட்களில் மோதிக்
கிழியாதவனுக்குப்
பூக்களைத் தடவும்
தகுதி கிடையாது !
மகிழ்ச்சியாய்ச் சிரி
கவலைகளைப் பிய்த்துக்
காற்று மண்டலத்திற்கு
அப்பால் வீசு !
எதைக் கண்டும்
பிரமிக்காதே
பிரமிப்பைப்போல் ஒரு
பின்னடைவே கிடையாது !
தோல்வி என்பது
சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம் !
நிலாவைத் தொட்டது
மூன்று தோல்விகளுக்குப்
பிறகுதான் !
நீ எழுந்தால் ஒரு
எட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து
விழுந்து விசாரிப்பான் கவனி !
இளைஞனே
இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !
நடக்குமா என்ற
கேள்வி-
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அத்திவாரத்தில்
விழுந்த கடப்பாறை !
உலகை உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப்படலமாக இருந்தவன்தான் !