நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே!
" நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே."
(புறநானூறு : பாடல் : 186
பாடியவர் : மோசிகீரனார்)
பொருள் விளக்கம் :
மன்னன் உயிர்த்தே = அரசை உயிராக உடையது.
மலர்தலை உலகம் = பரந்துகிடக்கும் நாடு.
வேன்மிகுதானை = வேற்படை மிகுதியாக உடைய சேனை.
மன்பதை = மக்கள் வாழுமிடம்.
அரசனது அத்தாணி மண்டபத்தில் அன்றொரு நாள்
ஆன்றவிந் தடங்கிய மேலோர் புலவர் அவை கூடிற்றாம்!
பல்பொருள் குறித்து விவாதம் எழுவதும் முடிவதும்
பலமுறை நடக்கும்; அங்கே பைந்தமிழ் மணக்கும்.
இம்முறையோ அரியதோர் கேள்வி பிறந்தது அவையில்
இன்னுயிர்க்கிணை எதுவென்றும் என்புதோல் போர்த்த உடலுக்கு
இணைதான் எதுவென்றும் இணையிலாப் புலவர் கூட்டம்
கணைகளாய்த் தொடுத்திட கருத்துக்கள் மோதின அக்களத்தில்
நெல்லும் நீரும் உயிராய் விளங்கிப் பல்லோர் உடலை வளர்த்து
நில்லா நெடுஞ்சுவர் உயிரையும் நிலைக்க வைத்திடுமென்றும்
நிலமாளும் வேந்தர்க்கும் அதுவே உயிராக விளங்குமென்றும்
நீருக்கும் நெல்லுக்குமுள்ள சிறப்பைச் செப்பினர் சிலபுலவர்
முரசு கட்டிலில் படுத்துறங்கி முடிமன்னன் கைகளாலே
அரசு மரியாதையாக வெண்சாமரம் வீசப்பெற்ற
மோசிகீரனார் எனும்புலவர் முற்றிய விவாதத்துக்கிடையே
மாசு மருவிலாக் கருத்தொன்றை வெளியிட்டார்!
" என்னருமைப் புலவர் பெருமக்காள்! இனிய
கன்னலெனத் தமிழ் வடித்துத் தருகின்ற பெரியீர்!
பொன்னின் நிறம் வாய்ந்த நெல்விளையும் கழனிகளில்
புனல்பாய்ந்து விதை முளைத்து, பயிரின் வேர் நனைத்து
உழவனது வியர்வையெலாம் அறுவடைக் குவியலாகி
உண்பதற்கு வெண்சோறு பொங்குதற்கும்;
உலையிலிட நீர் வேண்டும்; உண்மையது மறுக்கவில்லை!
உடல் வளர உயிர் வாழ நெல்லும் நீரும் தேவையென்பதிலும் மாற்றமில்லை!
சிந்தனைக்கு ஒரு வாதம் வைக்கின்றேன்;
சிறிதளவும் நடுமுள் நடுங்காமல் தீர்ப்பளிப்பீர்!
நாடாளும் அரசொன்று இருக்கும்போது - அவ்வரசு;
கேடான செயல்களுக்கும் கீழான குணங்களுக்கும் அடிமையாகி,
நீரும் நெல்லும் இல்லா நிலையில்
ஊரும் உலகும் தவித்திடும் வகையில்
சிரும் சிறப்பும் இல்லாச் "செங்கோல்"
செலுத்திடும் கொடுமை படைத்தடுமானால்
உடலெங்கே? உயிரெங்கே? இவ்விரண்டும்
ஒன்றைவிட்டு ஒன்றகன்று பிணமாக மாறிவிடும்!
அதனாலே;
மன்பதை ஆளும் ஆட்சியின் மாட்சியே - அந்த
மக்களுக்குயிராம் ; அவர்கள் வாழும் மண்ணுக்கும் உயிராம்!
வேற்படை விற்படையென விதவிதப் படைகளிருப்பினும்
விழிப்புடன் வேந்தன் விரைந்து செயல்படல் வேண்டுமன்றோ?
வெளிநாட்டுப் பகைப்புலத்தை விரட்டுகின்ற வீரமுடன்
ஒளிநாடாய்த் தன்னாட்டை உருவாக்கி வைப்பதற்கு
தெளிவுள்ள ஆட்சித் திறன் தேவையன்றோ? சோம்பலினால்
நெளிகின்ற போக்கிருந்தால்; நெல் எங்கே? நீர் எங்கே?
அறிவார்ந்த அரசொன்றே நாட்டுக்குயிராய் அமைந்துவிடின்
அதன்பின்னர் நீர்வளமும் நிலவளமும் பிறவளமும்
நிறைந்து குலுங்கிவிடும் அறிவீர்!" என்றார்.
மோசிகீரனார் மொழி கேட்டுப் புலவரெலாம் தமது வாதம்
தூசியென ஒப்புக்கொண்டு தோல்வியினை ஏற்றுக்கொண்டார்!
நெல்லும் உயிரன்றே! நீரும் உயிரன்றே! எனக்
கல்லில் செதுக்கிய எழுத்தாகப்
புறப்பாட்டு பூத்ததம்மா! அது என்றும்
புதுப்பாட்டாய்ப் பொலியும் அம்மா!