ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்

ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் தொலைத்துவிட்டு
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
சின்னச் சின்னக் கனவுகளை
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
*****
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
மூட நம்பிக்கை முளைக்கிறது.
*****
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
அல்லது,
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
*****
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
காரணம் -
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*****
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
*****
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள்.


கவிஞர் : வைரமுத்து(4-Jan-12, 11:41 am)
பார்வை : 90


பிரபல கவிஞர்கள்

மேலே