கார்த்திகைச் சுடர்கள்

திகுதிகு திகுவென
சேர்ந்துத் தீமூட்டி
செகத்தார்
எரித்து முடித்த
எம்
வெந்த காட்டுக்குள்
கிடக்கும்
வேகாத
முட்டைகளுடைத்து
வெளிவருகின்றன
கார்த்திகைச்
சுடர்கள்!

துயிலும் பிள்ளைகளின்
தூங்காத
கனவுறிஞ்சி
நெடுநெடென
நிமிர்ந்தெழுந்தப்
பால
மரங்களெல்லாம்
பதறி
அழ
பதறி
அழ
இடங்கள் சிதைத்து
எலும்புகள் சிதைத்து
எம்
வீரர்
விளைநிலத்தை
வெம்பரப்பாய்ச்
செய்த
பின்னும்
கணினிக்குள் கருத்தோடு
கட்டிவைத்தத்
துயிலுமிடம்
பொறுப்போடு
தேடி
புதைத்துவைத்த
வன்மத்தைப்
புத்திக்குள்
மீட்டெடுத்துப்
புலம் பெயர்ந்த
உறவெல்லாம்
நம்பிக்கை
அகல்
கொளுத்த
நம்பிக்கை
அகல்
கொளுத்த
எரியும் சுடர்களின்
ஏராள
ஒளி
கூடி
உரக்க
உச்சரிக்கின்றன...

"எங்கள்
ஈகம்
அணையாது
எங்கள்
தாகம்
தணியாது!


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:43 pm)
பார்வை : 20


மேலே