பாடு குயிலே!

புள்ளிச் சிறகடித்துப் பாடுகுயிலே! - தமிழன்
புதிது பிறந்தானென்று பாடுகுயிலே!
வெள்ளிக் குரலெடுத்துப் பாடுகுயிலே! - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

நேற்றுவரை உலகில் அஞ்சிநடந்தோம்! - பிறர்
நீட்டும் எலும்புகளை உண்டு கிடந்தோம்!
காற்றுத் திரும்பியது கண்டு மகிழ்ந்தோம் - ஒரு
கவிதை பிறந்ததென்று பாடுகுயிலே!

சாதிப் பிரிவினைக்குச் சாட்டை கொடுத்தோம் - தமிழ்ச்
சாதிக்கு மட்டுமிந்த நாட்டைக் கொடுத்தோம்!
வீதிக்கு வீதி மொழி வேட்கை படைத்தோம்! - விடி
வெள்ளி முளைத்ததென்று பாடுகுயிலே!

ஆளப் பிறந்தவர்கள் நாடு சமைத்தோம்! - எமை
ஆட்டிப் படைத்தவர்க்குப் பாடை சமைத்தோம்!
ஈழத் தமிழ்மனைக்குப் பாலம் அமைத்தோம்! - கவி
எண்ணம் பலித்ததென்று பாடுகுயிலே!

எட்டுத் திசைகளிலும் வெற்றி மகிழ்ந்தோம் - விண்ணின்
எல்லைதனிலே கொடிகட்டி மகிழ்ந்தோம்!
கொட்டும் முரசொடுகை தட்டிமகிழ்தோம் - இது
கொள்ளை மகிழ்ச்சி என்று பாடுகுயிலே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:42 pm)
பார்வை : 27


மேலே