வாருங்கள்!
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!
முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!